ஒரு குவளையின் பயன்பாடு - வெற்றிடத்தைப் பொறுத்தது

>> Thursday, April 23, 2009

-சுப.வீரபாண்டியன்
கடந்த 03.02.2009 ஆம் நாள் சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில், தமிழ்த்துறைத் தலைவவர் பேரா. சே.மு. முகமது தலைமையில் தமிழ் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன் நிறைவுரை ஆற்றினார். அந்நிறைவுரையின் ஒரு பகுதி வருமாறு:

ஒரு காலிக் குவளையின் பயன்பாடு, அதிலிருக்கும் வெற்றிடத்தைப் பொறுத்தே அமையும். நிரம்பி இருக்கும் குவளையால் எந்தப் பயனும் இல்லை. அதில் எதையும் ஊற்றமுடியாது; ஊற்றினால் கீழே வழியும். மாணவர்களின் பயன்பாடும் அப்படித்தான். மாணவர்கள் என்பவர்கள் நிரப்பப்படாத குவளை; எழுதப்படாத பலகை; கட்டப்படாத செங்கல். குவளையை எப்படி நிரப்புவது? எதனால் நிரப்புவது?

‘நேற்று’ என்பது முடிந்த நிலை. ‘நாளை’ என்பது தெரியாத நிலை. ‘இன்று’ என்பதுதான் இங்கு முக்கியம். மூடத்தனங்களுக்கு முடிவு கட்டுவோம் என்று பேசிய மாணவர்கள், இங்கே வாஸ்து சாஸ்திரங்கள், சோதிடங்களைப்பற்றி எல்லாம் மிக அருமையாகப் பேசினார்கள். நாம் இன்றும் பார்க்கிறோம், காலையில் எழுந்து நாளிதழைப் பார்ப்பவர்களில் பலர் தினப்பலன்களைப் பார்ப்பார்கள். அதில் ஒரு திருப்தி அவர்களுக்கு. ராசி பலனில் 12 ராசிகளின் பெயர்கள் இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன். துன்பமில்லாத மனிதன் யாரும் இருக்கமாட்டான். ஆகவே அதுபற்றி இரண்டு மூன்று வரிகளைப் போட்டுவிட்டு, இறுதியில் ‘திருப்தியான நாள்’ ‘திருப்திகரமான வாரம்’ ‘மகிழ்ச்சியான நாள்’ ‘மகிழ்ச்சிகரமான வாரம்’ - இப்படி முடிக்கப்பட்டிருக்கும். அதே ராசி பலன்களை மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ பார்த்தால், அதே செய்திகள் அப்படியே வேறு வேறு ராசியின் பெயர்களுக்கு இடம் மாறி இருக்கும். இப்படிப்பட்ட மூடத்தனங்களைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள் ‘இன்னுமா உறக்கம்’ என்று நெகிழவைக்கும் கவிதைகளையும் பாடினார்கள். ஈழ மக்களின் துடிப்பும், உணர்வும் இன்று மாணவர்களிடையே ஓர் எழுச்சியைத் தருகிறது என்பதை, இன்னுமா உறக்கம் கவிதைகளில் பார்க்கிறேன். இன்று உங்களைப் போல, அன்று நாங்கள் மாணவர்கள். அன்று இந்தியைத் திணித்தார்கள். அதற்கு எதிராக எழுந்தது மாணவர்களின் எழுச்சி. இன்று ஈழத்தில் தமிழினமே அழிந்து கொண்டு இருக்கிறது. இதற்காகவும் இன்று மாணவர்கள் தம் எதிர்ப்பை எழுச்சியுடன் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் தெரியும். சுப்பிரமணியசாமி உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது அவர் மீது முட்டை வீசப்பட்டது. என்ன ஆயிற்று? தேசமே பதறிப்போய் விட்டது. பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. தலையங்கங்கள் தீட்டின. தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் பெரிய அளவில் அதைக் காட்டின. அதை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. முட்டை வீசியதற்கா 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை? வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பகத்சிங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். பகத்சிங்கின் அமைப்பைச் சேர்ந்த ஜெயபால் வர்மா அப்ரூவராக மாறி அதே நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நிறுத்தப்படுகிறான். அப்போது, அந்த நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாகவே, அப்ரூவர் ஜெயபால் வர்மா மீது தன்காலில் கிடந்த செருப்பை எடுத்து வீசுகிறார் பகத்சிங்கின் நண்பர். நீதிபதி அதிர்ச்சியானாலும் கூட நீதிமன்றத்தில் தன் எதிரே செருப்பு வீசியவனுக்கு அவர்கொடுத்த கூடுதல் தண்டனை இரண்டுமாதம் சிறை, அவ்வளவுதான்.

நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் தொலைக்காட்சியில். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அமெரிக்க வல்லரசின் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஓர் ஈராக் பத்திரிகையாளர் தன் இரண்டு காலணிகளையும் வீசி எறிகிறார். அப்படி இருக்க இந்த சுப்பிரமணியசாமி மீது முட்டையை வீசியதற்காக 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது வியப்பாக அல்லவா இருக்கிறது. முட்டை வீசியதால் சாமியின் உயிர் போய்விட்டதா என்ன? இதைப் பெரிதுபடுத்திச் செய்தி வெளியிடும் ஊடகங்கள், உயிரைப் பணயமாக வைத்து ஈழத்துயரைத் துடைக்கக் கோரி உண்ணாநிலை இருக்கும் மாணவர்களின் எழுச்சியை, போராட்டத்தை பெரிய அளவில் வெளியிடுகின்றனவா என்றால் இல்லை!

இங்கே பக்கத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஐந்தாம் நாளாக உண்ணாநிலையைத் தொடர்கிறார்கள். அவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் தெருவில் துவண்டுபோய்க் கிடக்கிறார்கள். திருச்சி, செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இதே போல உண்ணாநிலை இருந்தார்கள். உண்ணாமல் இருந்து உயிரை மாய்த்துக் கொள்வதில் நான் உடன்பாடுடையவன் அல்ல. ஆனால், சாகும்வரை அதுவும் நீர்கூட அருந்தாமல் உண்ணாநிலை இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.

ஒரு செய்தியைச் சொல்கிறேன். அன்று 64 நாட்கள் உணவு உண்ணாமல் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தான் ஜதீந்திரநாத்தாஸ். தமிழ்நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டி 50 நாட்களுக்குமேல் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தார் சங்கரலிங்கனார். அதேபோல் ஈழத்தில் திலீபன். அவரும் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர்தான். ஈழமக்களுக்காக, ஈழ மண்ணுக்காக 1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி செப்டம்பர் 26 வரை 11 நாட்கள் உண்ணாமல், நீரும் அருந்தாமல் உயிர் விட்டவன் திலீபன். திலீபன் 6 அடி உயரமுள்ள நல்ல உடல்வாகுள்ளவன். உண்ணாவிரதம் என்றால் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உணவு உண்ணாமல் இருப்பது. ஆனால் தண்ணீரும் அற்றுத் தொண்டை வரண்டு, நாக்குத் தடித்து நாடி ஒடுங்கி, வதங்கி வாழ்க்கையின் இறுதிக்குச் செல்வது என்பது வேறு. காந்திகூடத் தண்ணீர் குடித்துத்தான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் திலீபன், அதுவும் இல்லாமல் இருந்ததால் 6 அடி உயரமான அவரின் உருவம் குறுகி, உடல் மெலிந்து மரணத்தைத் தழுவி இருக்கிற செய்தி உள்ளத்தை உறைய வைக்கும் செய்தியல்லவா!

அதுபோலத்தான் இங்கே எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களும், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களும் துவண்டு கிடந்தார்கள். தண்ணீர்கூட அவர்கள் குடிக்கவில்லை. தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சிறுநீரகம் பாதிக்கும். உண்ணாநிலை முடிந்தபிறகும் கூட சிறுநீரகப் பாதிப்பை சரிசெய்வதற்கு நெடுநாள் ஆகும். அப்படி ஒரு நிலை வேண்டாம் என்று அந்த மாணவச் செல்வங்களை என்போன்றோர் கேட்டுக்கொண்டும் கூட அந்தச் செல்வங்கள் தன் இனத்திற்காக, தன் இன மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகத் தொடர்ந்து தங்களது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அங்கே ஈழத்தில் நடைபெறும் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதில் இன்னொரு செய்தி இருக்கிறது. வியட்நாம் மீது அமெரிக்கா வீசிய குண்டு கிளஸ்ட்டர் பாம் அதாவது கொத்தணிக் குண்டுகள் எனப்படும். அந்தக் குண்டுகள் விழுந்தவுடன் வெடிக்கும். சிலகுண்டுகள் 6 மாதமோ ஓர் ஆண்டுக்குப் பிறகோ கூட வெடிக்கும். மூன்று ஆண்டுகள் கழித்தும் கூட வெடித்ததாகச் செய்தி இருக்கிறது. மேலும் அங்கே பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுகின்றன. அந்தக் குண்டுகள் விழுந்தவுடன் தீப்பற்றி எரியும். மரம் செடி கொடிகள் கூட எரிந்து கருகும். மனிதர்களின் உடல் பற்றி எரிந்து தோல் சுருங்கிக் கருகும். அப்படிப்பட்ட குண்டுகளை ஈழத்தில் மக்கள் மீது வீசுகிறது சிங்கள இராணுவம். ஏடு இல்லாமல், ஓடும் இல்லாமல் மரத்தடிப் பள்ளிகளில் படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், ஆண்கள், பெண்கள் என்று அனைவருமே அந்தக் குண்டுகளால் எரிந்து சிதைந்துவிடும் கொடுமை இப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய இன அழிப்புக்கு எதிராக ஓர் எழுச்சியை, ஓர் அசைவை மாணவர்களாகிய நீங்கள் இன்று உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்தி விடைபெறுகிறேன்.

மேலும் படிக்க..

உண்ணா விரதப் போரா? அண்ணா விரதப்போரா?

- கவிஞர் தணிகைச்செல்வன்

09. 03. 2009 அன்று சென்னையில், ஜெயலலிதா இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக மேற்கொண்ட உண்ணா விரதப் போராட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய போது, இலங்கைத் தமிழர் பற்றிய அவரது கட்சியின் ‘புதிய’ நிலைப்பாடுகளை முதல்முதலாக அறிவித்தார். அவர் அ.தி.மு.க பொதுச் செயலாளராகி 1991-இல் தமிழக முதல்வராகவும் ஆன நாள் முதல், ‘தமிழீழம்’ என்ற தனிநாடு கேட்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இலங்கையின் நட்பு நாடு என்பதால், இந்தியாவுக்கும் அது எதிரானதே என்றும் பல்வேறு காலகட்டங்களில் கூறி வந்தவர் ஜெயலலிதா. அதே போன்று, “விடுதலைப்புலிகள் இலங்கையின் பகைவர்கள் மட்டுமல்லர், இந்தியாவுக்கும் அவர்கள் கடும் பகைவர்கள்; எனவே இந்தியாவில் அந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும்” என்று போராடியதுடன் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அத்தடைச்சட்டத்தைப் புதுப்பிக்கவும் போராடி வந்தவர்; வருகிறவர் ஜெயலலிதா.

Vaiko and Jayalalitha எனவே, உண்ணா மேடையில் அவரது பேச்சு பழைய நிலைப்பாட்டிலிருந்து அவர் மாறிவிட்டது போன்ற தோற்றத்தை அளித்திருப்பது வியப்பன்று. ஆயினும் அவரது உரையைத் தோலுரித்துப் பார்க்கும் போதுதான் இவர் ஒன்றும் புதிய ஜெயலலிதா அல்லர்; பழைய ஜெயலலிதா தான் என்பது வெளிச்சமாகிறது. ஜெயலலிதா சென்னை மேடையில் பேசியதென்ன?

“இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு தமிழர் நாடு அடையும் சுயாட்சி இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும்” இந்த ஒற்றை வரிதான் அவரது மொத்த உரைக்குமான மூலக் கோட்பாடாகும். ஈழநாடு என்ற பெயரையோ, ஈழத்தமிழர் என்ற தொடரையோ அவர் மறந்தும் உச்சரிக்கத் தயாராயில்லை. தமிழர் நாடு, இலங்கைத் தமிழர் என்று அவர் மிக எச்சரிக்கையாகவே சொற்களைப் பயன்படுத்தினார். அதைவிடவும் அவர் மிகவும் எச்சரிக்கையாக வைத்த ஒரு நிபந்தனையில்தான் சோ ராமசாமியும், சுப்பிரமணிய சாமியும் ஜெயலலிதாவுக்கு வழங்கியுள்ள சட்டக் குறிப்பு வெட்ட வெளிச்சமாகிறது.

அது என்ன நிபந்தனை? “இலங்கையின் அரசியல் சட்டத்துக்குட்பட்ட ஒரு தமிழர் நாடு” என்பது ஜெயலலிதாவின் நிபந்தனை. இலங்கையில் உள்ள அரசியல் சட்டம் ஒரு தனித் தமிழ்நாட்டை அங்கீகரிக்குமா? என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பாமலே வைகோவும், தா. பாண்டியனும் ‘அம்மாவை’ வானளாவப் போற்றித் தள்ளி விட்டார்கள். மருத்துவர் ஐயா அவர்கள் தமது அறிக்கையாலேயே அம்மையாரை புகழ் மழையில் குளிப்பாட்டிவிட்டார். மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் வரதராசன் மட்டுமே அம்மையாரின் போதைக்கு ஆட்படாமல் தம் கட்சியின் நிலைப்பாட்டை அந்த மேடையில் எடுத்து வைத்தார். “ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள் தமிழர்களுக்கான மாநில உரிமைகள் பெறுவதே மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்வு” என்றார் தோழர் வரதராஜன்.

கூர்ந்து கவனித்தால் ஜெயலலிதா கூறியதும் வரதராஜன் கூறியதும் ஒன்றே என்பது புரியும். அதாவது, ‘இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்ட ஒரு தமிழர் நாடு’ என்பது தனித்தமிழ் நாடு அல்ல. ஏனெனில் சுதந்திரமான ஒரு தமிழ் ஈழநாட்டை அங்கீகரிக்கவோ, அனுமதிக்கவோ இலங்கையின் அரசியல் சட்டத்தில் இடமே இல்லை. அப்படியானால் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலமாகத்தான் ஜெயலலிதா கூறும் இலங்கையின் தமிழர் நாடு இருக்குமா எனக் கேட்டால், அதற்கும் கூட இலங்கைச் சட்டத்தில் இடமில்லை. எந்த அதிகாரமும் இல்லாத நமது சிற்றூரின் பஞ்சாயத்துக்குள்ள தகுதிதான் இலங்கையிலுள்ள மாகாணங்களின் தகுதியாகும்.

இலங்கையின் அரசியல் சட்டத்துக்குட்பட்ட ‘தமிழர் நாடு’ என்பதன் சரியான பொருள், ‘சிங்கள பேரினவாத ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு அடிமைப் பிரதேசம்’ - என்பதேயாகும். இலங்கையின் முதலாவது அரசியல் சட்டத்தை 1948-இல் சோல்ஸ்பரி என்ற ஆங்கிலேயர், அய்வர் ஜென்னிங்ஸ் என்ற சட்ட அறிவாளரின் துணை கொண்டு உருவாக்கித் தந்தார்.

1956-இல் இயற்றப்பட்ட சட்டம் இலங்கையின் ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தியது. இலங்கையின் முதல் குடியான தமிழனும் இலங்கையின் முதல் மொழியான தமிழும் அரசுரிமையற்ற அநாதைகள் ஆனார்கள். 1972-இல் புதிய அரசமைப்புச் சட்டம் வந்தது. ‘எந்த இனத்துக்கும் மதத்துக்கும் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது’ எனப் பழைய சட்டத்திலிருந்த விதி 29-சி புதிய சட்டத்தில் நீக்கப்பட்டது. அதன் மூலம் சிங்களன் முதன்மைக் குடிமகன் ஆனான். தமிழர் இரண்டாம் குடிமக்கள் என்ற கொடிய விதி கால்கொண்டது.

1978-இல் இயற்றப்பட்ட அரசியல் சட்டம் இலங்கையின் தேசிய மதம் பவுத்தம் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தியது. 1997-இல் வெளியிடப்பட்டது இலங்கைக் குடியரசுக்கான நகல் அரசமைப்புச்சட்டம். அதில் 1 முதல் 14 பகுதிகளும், பின் 16 முதல் 18 பகுதிகளும் உள்ளன. 15 என்ற பழைய சட்டத்தின் பகுதி விடுபட்டுள்ளது. விடுபட்டுள்ள அந்தப் பகுதி 15-இல் இருந்தது என்ன தெரியுமா? அந்தப் பகுதியில் 121 முதல் 144 வரை உள்ள விதிகள் “இலங்கையின பிரதேசங்களுக்கு அதிகாரங்களை மாற்றிக்கொடுப்பது” பற்றிய நடை முறைகளை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.

‘அதிகார மாற்றம் அல்லது அதிகாரப் பரவல்’ என்ற விதி நீக்கப்பட்டுவிட்டதால் முந்தைய அரசியல் சட்டத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் ஈழத்தமிழர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டுவிட்டது. புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் 2002-இல் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தமிழர்களின் வடக்குப் பகுதியையும் கிழக்குப் பகுதியையும் இணைத்து ஒரே தமிழ்ப் பகுதியாக (தமிழ் ஈழமாக) அங்கீகரிக்கும் விதியை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் இலங்கையின் அரசியல் சட்டப்படி அந்த ஒப்பந்தம் செல்லாது என்று நிராகரித்தது அந்நாட்டின் உச்சநீதிமன்றம். இதுதான் இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கு வழங்கிய நீதி.

1997 இல் வந்த நகல் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், “இலங்கைத் தேசத்தின் ஒன்றியத்திலுள்ள பிரதேசங்கள், இலங்கை ஒன்றியத்திலிருந்து பிரிக்க முடியாதவை” என்று கூறப்பட்டுள்ளது. “இலங்கையிலிருந்து எந்தப் பிரதேசமும் பிரிந்து செல்ல நேர்முகமாகவோ மறைமுகமாகவோ முயலக்கூடாது” என்று எச்சரிக்கின்றது அச்சட்டத்தின் விதி 2 உள் பிரிவு 2 (எ). இந்த அடக்குமுறைச்சட்டத்தைத்தான் இலங்கையின் அரசியல் சட்டமாக ஏற்றுக் கொள்ளுகிறார் ஜெயலலிதா. ‘அந்தச் சட்டத்துக்குட்பட்டு ஒரு தமிழர் நாடு’ என்பதுதான் அவர் கோருவது. இதை அவர் தெரிந்தே செய்கிறார் என்றால், தமிழ்நாட்டு வாக்காளர்களை பகிரங்கமாக ஏமாற்றும் பொருட்டு ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று குற்றம் சாட்டுகிறோம். தெரியாமல் செய்கிறார் என்றால் அவர் பேசிய இடம் சேப்பாக்கமா அல்லது கீழ்ப்பாக்கமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

2009-இல் புரட்சியம்மா எடுத்திருக்கும் ‘புதிய’ நிலைப்பாட்டால் பூரித்துப் போயிருக்கும் வைகோ அவர்கள் முன் சில எளிய வினாக்களை வைக்கிறோம்.

வைகோ அவர்களே! இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தமிழர்நாடு என்பது தனி நாடல்ல. ஒரு தமிழ் மாநிலமே என்பதைச் சட்டம் படித்த நீங்கள் அறிவீர்கள். எமது முதல் கேள்வி தமிழ் ஈழம் என்ற உங்கள் நிலைப்பாடும் தமிழ் மாநிலம் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாடும் ஒரே நிலைப்பாடுதானா? ஜெயலலிதாவின் முந்தைய நிலைப்பாடுகளுக்கும் இன்றைய நிலைப்பாட்டுக்கும் வேறுபாடு ஏதும் இருக்கிறதா? இல்லை என்பதே எமது விடை; அதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முந்தைய நிலைப்பாடுகளையும் இன்றைய நிலைப்பாடுகளையும் வரிசைப்படுத்தியுள்ளோம்:

ஈழம் என்பதே இல்லை என்பது அவரது முந்தைய நிலை. ‘தமிழ்த் தேசம்’ சாத்தியமில்லை’ என்பது ஜெயலலிதாவின் இன்றைய நிலை. 30. 01. 2009 இந்து நாளிதழில் வெளியாகியுள்ள அவரது அறிக்கையே இதற்கு ஆதாரமாகும். அவரது இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறுபாடு தெரிகிறதா? இல்லையே.

‘ஈழத்தமிழர் என்று இலங்கைத் தமிழரைக் குறிப்பிடுவது தவறு’ என்பது அம்மாவின் முந்தைய நிலை. இன்றும் அதே நிலைதான். ஈழத்தமிழர் என்ற பெயரைப் புறக்கணித்து ‘இலங்கைத் தமிழர்’ என்றே தன் அறிவிப்புகளில் குறிப்பிட்டார்.

‘புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும்’ என்பது அவரது நேற்றைய நிலை. இன்று மாறிவிட்டதா? இல்லை; அதே நிலைதான். புலிகள் இயக்கத்துக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அவரது இன்றைய நிலை. அதில் மாறியதாக அவர் எங்கேயும் இன்றுவரை அறிவிக்கவில்லை.

‘பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலேற்ற வேண்டும்’ என்பது ஜெயலலிதாவின் நெடுநாளைய ஆசை. அந்த ஆசைகளை அகற்றிவிட்டதாக அம்மையார் இதுவரை அறிவிக்கவில்லை. ஆழ்மனதில் அது கனன்று கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வெடித்து வெளிவரும்.

புலிகளை ஆதரிப்பது குற்றம் என்பது அவரது நேற்றைய நிலை. இன்றைய நிலை என்ன? அது குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகாவது தன் நிலையை மாற்றிக் கொண்டாரா? இல்லையே.

‘புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கும் திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை’ என்று சட்டப் பேரவையிலேயே கொக்கரித்தாரே. அந்தக் கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டாரா? இல்லையே. “புலிகளைக் கொல்வது தவறல்ல. அந்தப் போரில் பொதுமக்கள் (தமிழர்கள்) இறந்து போவது இயல்புதான் அது குற்றமல்ல” என்ற அவரது கூற்றை மாற்றிக் கொண்டாரா? இல்லையே.

பொடாச் சட்டத்தில் தமிழர் தலைவர்களைத் தண்டித்தது தவறு என்று இந்தியாவே கண்டித்த போதும், இம்மியேனும் இறங்கி வந்தாரா? அவர்கள் பிணையில் வெளிவருவதைக் கூடப் பொறுக்காமல் இறுதிவரை மறுத்த தாயுள்ளம் படைத்தவரல்லவா அவர். பொடாச் சிறையிலிருந்து புலம் பெயர்ந்து வைகோ போயஸ் சிறையில் குடியேறிய பிறகேனும், தன் தவற்றுக்காக ஜெயலலிதா அவரிடம் வருத்தம் தெரிவித்ததுண்டா? இன்று வரை இல்லை. இனியும் அந்த இறுமாப்பே நீடிக்கும். எனவே அவர் திருந்திவிட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்?

போனதெல்லாம் போகட்டும். பொடா போன்ற ஒரு மக்கள் விரோதச் சட்டம் இனி வேண்டாம் என வாதாடும் வைகோவை வழிமொழியத் தயாரா மூன்றாம் அணித் தலைவி? தயாரில்லை. ‘பொடா வேண்டும். பயங்கரவாதத்தை அடக்க’ என்பதே அம்மணியின் அழுத்தமான குரல். மூன்றாம் அணியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான ‘அம்மணியின் இந்தக் குரல் அத்வானியின் குரலே!’ இதில் ஜெயலலிதாயின் நேற்றைய நிலைதான் இன்றைய நிலையும். இதில் எந்த மாற்றமுமில்லை, என்பதை உணர்ந்த பின்னரேனும் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி அம்மையாருக்கு ஒரு அடையாள எதிர்ப்பையாவது காட்டினாரா வைகோ? அம்மையாரை ஆதரிப்பதில் காட்டும் அவரது சிம்மக்குரல் அவர் மீது விமர்சனம் என்கிறபோது ஊமையாகிவிடுகிறது.

ஆக, ஜெயலலிதாவின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து இன்றைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாதபோது அவர் தமிழர் நாடு என்று கூறிய ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஊடகங்கள், ‘தமிழர் நாடு என்றால் தனி நாடுதான்’ என்று கயிறு திரிக்க முனைந்துவிட்டன. அவற்றிலும் ஏடகங்கள் ‘தனி நாடு’ என்று அட்டைப்படக் கட்டுரைகளையே புனைந்துவிட்டன. ஜெயலலிதாவின் தமிழர் நாடு என்பதன் உள்ளடக்கம் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு உண்ணாவிரத மேடையில் பேசியவர் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் மட்டுமே.

ஈழச்சிக்கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையும், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கையும் ஒன்றே. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராதவகையில் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் செய்வதன் மூலம் ஈழப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கைக் கொள்கை. ஆனால் தா. பாண்டியன் தன் கட்சியின் கொள்கையை மறைத்துவிட்டு அம்பாள் அபிஷேகத்திலேயே கவனம் செலுத்தினார்.

வைகோ அவர்களாவது ‘தமிழர் நாடு’ என்று ஜெயலலிதா கூறியதன் உட்பொருளை விளக்கியிருக்கலாம். அப்படி விளக்கியிருந்தால் ஜெயலலிதா தனி நாடு கோருவது போன்ற பொய்த்தோற்றம் சிதறிப் போயிருக்கும். எனவே தமிழர் நாடு என்பதன் மெய்ப்பொருளைத் தெரிந்தே மறைத்தார் வைகோ. ஊடகங்களாவது அதன் உண்மைப்பொருளை வெளிப்படுத்தினவா என்றால், திட்டமிட்டே அவையும் மறைத்துவிட்டன - பரபரப்புச் செய்தியின் தேவை கருதி.

அண்ணாவின் பெயரால் கழகம் நடத்தும் அம்மையார், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தனி ஈழம்தான் அண்ணாவின் கொள்கை என்பதை அறியாமல் இருக்கமாட்டார். ஆனால் அவரது உண்ணாவிரதப் பேச்சு ‘அண்ணா விரோதப் பேச்சாகவே’ அமைந்து விட்டது என்பதை நடுநிலைத் தமிழர்களேனும் புரிந்து கொள்ள வேண்டும் - என்பதே நமது வேண்டுகோள்.

மேலும் படிக்க..

சமூகத்தின் இரட்டைப் பார்வை


-உமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா? முடிகிறதே நம் சமூகத்தால்! ஆண் என்றால் ஒரு பார்வை; பெண் என்றால் ஒரு பார்வை. ஒரு செயலைச் செய்யும் போது எழுகின்ற சமூகத்தின் விமர்சனங்கள் ஆணுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்ணுக்கு ஒரு மாதிரியாகவும்தானே இருக்கின்றன. சமூகத்தின் தவறுகளால் எளிதாகவும், அதிக அளவிலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அதே வேளையில், எந்தச சமூகத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அதே சமூகம்தான் அவர்களைப் புறக்கணிக்கவும் செய்கிறது. மேலும் சமூகத்தின் எள்ளலுக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாகப் பாலியல் தொழிலாளிகளையும், தேய்வு (எய்ட்ஸ்) நோய்க்கு ஆளான பெண்களையும் சொல்லலாம்.

தெரிந்தே யாரும் புதைகுழியில் விழுவதில்லை. பாலியல் தொழிலாளிகளும் அப்படித்தான். மருத்துவராக, அறிவியலாளராக, ஆசிரியராக, உயர் அதிகாரியாக வரவேண்டும் என்னும் இளமைக் கனவுகளோடுதான் அவர்களும் வளர்ந்திருக்கக் கூடும். அவர்கள் பாலியல் தொழிலாளிகளாக ஆனவர்கள் என்பதைவிட பாலியல் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்று சொல்வதுதான் சரி. காதல் என்னும் போர்வையில் ஏமாற்றும் ஓர் ஆணால், குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு குடிமகனால், வறுமையால், இளவயதுத் திருமணத்தால், அறியாமையால் - இப்படி இன்னும் பல சமூகக் காரணிகளால் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

“சூழ்நிலையால் கெட்டோம் என்று சொல்பவர்கள், அதிலிருந்து வெளியேவர முயற்சி செய்யவேண்டாமா? உழைத்துப் பிழைப்பதற்கு எத்தனையோ வேலை வாய்ப்புகள் உள்ளனவே” என்று நியாயம் பேசுபவர்களுக்கு....

கடந்த 10.03. 2009, செவ்வாய் அன்று, INP+, World Vision, SIAAP ஆகிய அமைப்புகள் இணைந்து, சென்னை கோயம்பேட்டிலுள்ள விஜய் பார்க் விடுதியில் ஒரு பொது விசாரணை நிகழ்ச்சியை நடத்தியது. மார்ச் - 8 பெண்கள் நாளை முன்னிட்டு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களும், பாலியல் தொழிலாளிகளும் கலந்து கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்தனர்.

பேபியம்மாள் என்னும் முன்னாள் பாலியல் தொழிலாளி, “இத்தொழிலுள்ள பெண்கள் மத்தியில் கவுன்சிலிங் செய்து, அவர்களை இதிலிருந்து வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் இழிவாகப் பேசுகிறார்கள்” என்றார்.

“நாங்கள் இந்தத் தொழிலை விட்டுவிட்டோம். இந்திரா பெண்கள் முன்மாதிரிக் கூட்டமைப்பில் சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களின் நடுவில் வேலை செய்து வருகிறோம். ஆனாலும், காவல்துறையின் தொல்லைகள் இன்றும் தீர்ந்தபாடில்லை. உறவினர்களுடன், பிள்ளைகளுடன் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தால் கூட, வாடிக்கையாளருடன் இருந்ததாகக் கூறி, அழைத்துச் சென்றுவிடுகின்றனர். மற்ற ஆண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏற்கனவே வந்தவள் தானே, இப்ப மட்டும் என்னடி வரமாட்டேங்குற என்று மோசமான சொற்களால் திட்டுகிறார்கள் ” - இது அவருடன் வந்திருந்த வேறு இரண்டு பெண்கள் கூறியவை.

திருந்தி வாழ நினைக்கும் இவர்களை இந்தச் சமுதாயம் நடத்துகின்ற முறை இப்படித் தானே இருக்கிறது. ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன், குடிகாரன் திருந்திவிட்டேன் என்றால் ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம், திருந்தி மறுவாழ்வுக்காக ஏங்கும் இவர்களை ஏற்க மறுப்பது என்ன நியாயம்?
“வண்டு வந்து தேன்குடித்தால்
மலருக்குத்தான் தண்டனை
வழுக்கி விழும் பெண்களுக்குச்
சட்டத்திலும் வஞ்சனை ”

என்று கவிஞர் கண்ணதாசன் பாட்டில் சொன்னதைப் போலத்தான் நடைமுறையும் உள்ளது.

இந்தியாவில் விபச்சாரத்துக்குச் சட்டத் தடை உள்ளது. முன்பு ‘விபச்சார ஒடுக்கல் சட்டம்’ என்று இருந்தது. பின்னர், இது திருத்தப்பட்டு தற்போது ‘விபச்சாரத் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் உள்ளது. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக, தனிப்பட்ட முறையில் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படிக் குற்றமாகாது. இதை முன்வைத்து ஒரு பெண்ணைக் கைது செய்ய முடியாது. இது விபச்சாரம் ஆகாது என்பதுதான் இந்தச் சட்டங்கள் சொல்லும் உண்மை.

பிறகு எதுதான் விபச்சாரம்? ‘ஒரு நபர், தன்னுடைய வருமானத்திற்காக, மற்றொரு பெண்ணை உடலுறவில் ஈடுபடுத்தித் தொழில் செய்வதுதான் விபச்சாரம்’ என்கிறது சட்ட வரையறைகள். ஆனால், தனிப்பட்ட பெண்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பான இந்தக் கைதுகளை நியாயப்படுத்த முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினரே சில புனைவுகளைச செய்கின்றனர். ‘வீதியில் நின்று விபச்சாரத்திற்கு அழைத்தார்’, ‘ரோந்து செல்லும்போது பிடிபட்டார்’, ‘போனில் வந்த தகவலின்படி கைது செய்தேன்’ - என்பன போன்ற குறிப்புகளைச் சேர்த்துத் தங்களின் நடவடித்தைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றது காவல்துறை.

பாலியல் தொழிலை விட்டு முழுவதுமாக விலகிவந்துவிட்ட நிலையிலும், காவல்துறையினர், தங்களின் குற்றப்பதிவு இலக்கை முடிக்க வேண்டும் என்பதற்காகக் கைது செய்து, வேறு வேறு பெயர்களில் வழக்குப்போடுவதும் நடக்கிறது. குற்றம் என்று கருதப்படும் செயலில் இருவர் ஈடுபடும்போது, ஒருவர் மீது மட்டும் வழக்குப் போடுவது எந்தவிதத்தில் சரி?

திருந்த நினைக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் சமூகமோ அவர்களைக் குற்றச்சூழலிலேயே அமிழ்த்தி வைக்க முனைகிறது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டியது சமூகம்தான். சமூகத்தின் இந்த இரட்டைப்பார்வை தேய்வு (எய்ட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் வெளிப்படுகிறது. தேய்வு (எய்ட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை அந்த நோயைவிடக் கடுமையாக வதைக்கிறது இந்த சமூகம். தேய்வு (எய்ட்ஸ்) நோய்க்கு உள்ளான பெண்கள் தவறானவர்கள் என்ற கண்ணோட்டமே நிலவுகிறது. உடலுறவின் மூலம் மட்டுமல்ல, இரத்தம் ஏற்றுதல், ஊசி இவற்றின் மூலமாகவும் இந்நோய் பரவக்கூடும்.

படிக்காதவர்கள்தாம் அறியாமையால் பேசுகிறார்கள் என்றால், மருத்துவம் படித்தவர்கள்கூட மனிதநேயம் அற்ற முறையில்தான் நடந்து கொள்கின்றனர். வேர்ல்ட் விசன் கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வராணியின் கணவர் ஓர் எய்ட்ஸ் நோயாளி. அவர் சில நாட்களுக்கு முன்பு, விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தார் செல்வவராணி. அவரைத் தொட்டு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யாரும் முன்வரவில்லை. கணவருக்கு அவரே தாதியாக மாறி மருத்துவம் பார்த்திருக்கிறார். இங்கே ஆலோசனைகளும், அறிவுரைகளும் மருத்துவர்களுக்கே முதலில் தேவைப்படுகின்றன. இதுதான் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளாகவும் வெளிப்பட்டது.

கணவன், மனைவி இருவருமே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கணவனைவிட மனைவிதான் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்கிறார். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பெண்கள்தான் காயப்படுகிறார்கள். மகனால் பாதிக்கப்பட்டவர்தான் மருமகள் என்று தெரிந்திருந்திருந்தும், மருமகளை மட்டும் சொற்களால் கொட்டும் புகுந்த வீட்டுச்சொந்தங்களின் ஒருதலையான பார்வை; நடத்தை சரியில்லாதவள் என்று நாக்கூசாமல் பேசும் சமூகத்தின் இரக்கமற்ற சொற்கள் - இவைகள் எல்லாம்தான் நோயைவிடக் கடுமையாக இவர்களை பாதிக்கின்றன.

அரசும், அரசு சாரா நிறுவனங்களும் இவர்களுக்காக எத்தனையோ திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இருந்தபோதும் அதனைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் மனநிலையில் மனிதநேயம் மலராமல் மறுவாழ்வு என்பது முழுமை பெறாது. சமூகத்தின் மனமாற்றமே இவர்களுக்கான சிறந்த மருந்து.

மேலும் படிக்க..

ஒரு வாக்காளர் இரண்டு வாக்குகள்

ஜேர்மனியிலிருந்து சபேசன்
இந்தியாவில் நடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் காலக் கூத்துகள் அரங்கேறத் தொடங்கி விட்டன. கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு கட்சிகள் கூட்டணிக்காக அலைந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் அமைய வேண்டிய அவசியம் இல்லாத, மக்கள் ஆதரவு பெற்ற அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறக் கூடிய ஜேர்மனியின் தேர்தல் முறை பற்றி எழுதுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறையை புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினம் அன்று. ஜேர்மனியில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்குகள் உண்டு. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோரப்படுகின்ற இரட்டை வாக்குமுறையோடு இதை ஒப்பிட்டுக் குழுப்பிக் கொள்ளக் கூடாது. அது வேறு. இது வேறு. இரண்டு வாக்குகளில் ஒன்று வேட்பாளருக்கும் மற்றது கட்சிக்கும் வழங்கப்படும். அதாவது ஒருவர் ஒரு வாக்கை தான் விரும்பும் வேட்பாளர் ஒருவருக்கும், மற்ற வாக்கை தான் விரும்புகின்ற கட்சிக்கும் போடுவார். முதலாவது வாக்கைப் பெற்ற வேட்பாளர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், இரண்டாவது வாக்கைப் பெறும் கட்சி வேறொன்றாகவும் இருக்கலாம்.

உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் நல்லவராகவும், மக்கள் செல்வாக்குப் பெற்றவராகவும் இருக்கின்றார் என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு வாக்களிக்க விரும்புகின்ற ஒருவருக்கு சிலவேளைகளில் அதிமுக என்னும் கட்சியைப் பிடிக்காமல் இருக்கலாம். அப்பொழுது இந்த இரட்டை வாக்குமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும். முதலாவது வாக்கை நல்லவரான அதிமுக வேட்பாளருக்கும், இரண்டாவது வாக்கை திமுகவிற்கோ, வேறொரு கட்சிக்கோ போட்டு விட வேண்டியதுதான்.

முதலாவது வாக்கை வேட்பாளருக்குப் போடுவதன் மூலம் அந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறார். அந்த வேட்பாளர் சார்ந்துள்ள கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கிடைக்கின்றது. இந்த இரண்டாவது வாக்கால் என்ன பயன் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். இரண்டாவது வாக்குகள் எண்ணப்பட்டு விகிதாசர முறைப்படி இடங்கள் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதைச் சற்று புரியும்படியாக பார்ப்போம்.

ஒரு நாட்டில் நூறு தொகுதிகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறைப்படி அந்த நாட்டில் இருநூறு இடங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். எத்தனை தொகுதிகள் இருக்கின்றதோ, அதே போன்று இரு மடங்கு இடங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும். (ஜேர்மனியில் 299 தொகுதிகளும் 598 பாராளுமன்ற இருக்கைகளும் உள்ளன)

இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக நாம் நூறு தொகுதிகள் என்ற கணக்கை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிகமான முதல் வாக்கைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று, அந்தத் தொகுதிகளின் சார்பில் பாராளுமன்றத்திற்கு செல்வார்கள். ஆனால் நூறு தொகுதிகள் இருந்தால் பாராளுமன்றத்தில் இரு மடங்காக இருநூறு இருக்கைகள் இருக்கும் என்று பார்த்தோம் அல்லவா? நூறு இருக்கைகளை நேரடியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள, மிகுதி நூறு இடங்களும் கட்சிக்கு என்று வீழ்ந்த இரண்டாவது வாக்குகள் எண்ணப்பட்டு, விகிதாசார முறைப்படி பகிர்ந்து கொடுக்கப்படும்.

ஒரு கட்சி முதலாவது வாக்கு மூலம் நேரடியாகப் பெறுகின்ற இடங்களோடு, கட்சிக்கு என்று விழுந்த இரண்டாவது வாக்குகளின் அடிப்படையிலும் இடங்களைப் பெற்றுக் கொள்ளும். உதாரணமாக அறுபது இடங்களில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் வேட்பாளர்கள் மற்றக் கட்சியின் வேட்பாளர்களை விட அதிகமான முதலாவது வாக்குகளைப் பெறுகின்றார்கள். அதன்படி அந்தக் கட்சியின் அறுபது வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வார்கள். அத்தோடு இரண்டாவது வாக்குகளில் முப்பது வீதமான வாக்குகளை அந்தக் கட்சி பெறுகின்றது. அப்பொழுது விகிதாசரப்படி முப்பது இடங்கள் மேலதிகமாக அந்தக் கட்சிக்கு கிடைக்கும். இந்த முப்பது இடங்களுக்கான உறுப்பினர்களை கட்சியே தேர்வு செய்யும். இந்தக் கணக்கின்படி பாராளுமன்றத்தில் உள்ள இருநூறு இடங்களில் குறிப்பிட்ட கட்சி 90 இருக்கைகளை பெறும்.

அதே போன்று எந்த ஒரு தொகுதியிலும் நேரடியான வேட்பாளர்களை பெற முடியாது ஒரு கட்சிக்கு 25 வீதமான வாக்குகள் கிடைக்கின்றன என்றால், அந்தக் கட்சி இருநூறு பாராளுமன்ற இருக்கைகளில் இருபத்தைந்தை பெற்றுக் கொள்ளும். இந்த இருபத்தைந்து பேரும் கட்சியால் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்படுவார்கள். கட்சிக்கு என்று வழங்கப்படும் இரண்டாவது வாக்குகளை ஐந்து வீதத்திற்கும் குறைவாக பெறுகின்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் இடங்களைப் பெறமாட்டாது என்பது போன்ற சில விடயங்களும் இதில் இருக்கின்றன. இவைகளையும் பார்த்து அத்தனை ஆழமாக நாம் போக வேண்டியது இல்லை. இதுவரை கூறியவைகளை வைத்து ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தத் தேர்தல் முறை இருப்பதால் ஜேர்மனியில் தேர்தலுக்கு முந்தயை கூட்டணிகள் கிடையாது. தேர்தல் முடிந்த பின்பு அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கு பெரும்பான்மை போதவில்லையென்றால், ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஆட்சியை அமைத்துக் கொள்ளும். இந்த முறையை இந்தியாவின் தேர்தல்களில் நடைமுறைப்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. இதற்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள இடங்களை அதிகரிக்கலாம். அல்லது தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் அதிகமான இடங்களைப் பெறுவது ஒன்றும் தவறு இல்லை.

ஜேர்மனிய தேர்தல் முறை மூலம் மக்களால் தாம் விரும்பிய வேட்பாளர்களையும் கட்சிகளையும் தேர்ந்தெடுக்க முடியும். ஜனாநயகமும் வலுப்பட்ட மாதிரி இருக்கும். முப்பது வீத வாக்குகளை பெற்ற கட்சி பத்து வீத வாக்குகளை பெற்ற கட்சியை விட குறைவான இடங்களைப் பெறுகின்ற கூத்துகள் பல முறை தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. இப்படியான நிகழ்வுகள் இந்தத் தேர்தல் முறையில் வரவே வராது. பெரிய கட்சிகள் ஒரு போதும் “படுதோல்வி” அடைய வேண்டிய அவசியமும் ஏற்படாது. 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக நான்கு இடங்களையே பெற்றது. 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக நான்கு இடங்களை பெற்றது. இத்தனைக்கும் இந்தக் கட்சிகள் ஏறக்குறைய முப்பது வீதமான வாக்காளர்களின் ஆதரவை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியைப் போன்ற ஒரு தேர்தல் முறை இருந்தால் இந்தக் கட்சிகள் இத்தகைய தோல்வியை பெற்றிருக்க மாட்டாது. இதை விட கட்சியின் முக்கிய தலைவர்கள் நேரடியாக ஒரு தொகுதியில் போட்டியிட்டு, தமது சக்தியை ஒரு தொகுதியிலேயே செலவழிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது. பெரிய தலைவர்கள் இரண்டாவது வாக்கின் ஊடாக கட்சியால் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ செல்லலாம். இந்தத் தலைவர்கள் தமது கட்சிக்காக அனைத்துத் தொகுதிகளிலும் பரப்புரை செய்வதில் தமது கவனத்தை செலுத்தலாம்.

சிறிய கட்சிகளும் தங்களின் சுயத்தைக் காத்துக் கொள்ள முடியும். கூட்டணிக்காக அலைய வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் குறிப்பிட்டளவு மக்கள் ஆதரவைக் கொண்டிருந்தும் இடங்களை வெல்ல முடியாத நிலையில் மாறி மாறி கூட்டணி அமைத்து பொதுவான வாக்காளர்களிடம் தமது பேரைக் கெடுத்துக் கொள்கின்றன. யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்கின்ற தேமுதிகவும் மெது மெதுவாக அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி வருகின்றது.

ஜேர்மனிய தேர்தல் முறைப்படி இதைப் போன்ற சங்கடங்களை இந்தக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியது இல்லை. மதிமுக சந்தித்த முதலாவது தேர்தலில் ஏறக்குறைய ஏழு வீத வாக்குகளை பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஜேர்மனிய தேர்தல் முறைப்படி 468 சட்டமன்ற இருக்கைகள் என்ற வைத்துக் கொண்டால், அந்தத் தேர்தலில் மதிமுகவிற்கு 16 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் எந்த இடமும் கிடைக்கவில்லை. தேமுதிக சந்தித்த முதலாவது தேர்தலிலும் ஏறக்குறைய அதே அளவு வாக்குகள் அந்தக் கட்சிக்கு கிடைத்தன. ஆனால் ஓரே ஒரு இடம்தான் அந்தக் கட்சிக்கு கிடைத்தது.

முப்பது வீத வாக்கை பெறுகின்ற கட்சி சட்டமன்றத்தில் எண்பது வீதமான இடங்களைப் பெறுவதும், இருபத்தெட்டு வீதமான வாக்குளை பெறுகின்ற கட்சி வெறும் இரண்டு வீதமான இடங்களைப் பெறுவதும், பத்து வீத வாக்குகளை பெறுகின்ற ஒரு கட்சி ஐந்து வீதமான இடங்களைப் பெறுவதும், அதே அளவு வாக்குகளைப் பெற்ற இன்னொரு கட்சி எந்த ஒரு இடத்தையும் பெறாமல் போவதும் எந்த வகையிலும் ஜனநாயகம் என்று ஆகாது.

ஆகவே இந்தியாவில் உள்ள கட்சிகள் ஜேர்மனிய தேர்தல் முறை பற்றி சற்றுக் கவனம் செலுத்துவது மக்களுக்கும், கட்சிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் நன்மையாக அமையும்.

மேலும் படிக்க..

பட்டுக்கோட்டை அழகிரி

-இனியன்

அவர் பேசத் தொடங்கியபோது அந்தக் கைக்குட்டை வெள்ளையாய்த்தான் இருந்தது. இடையிடையே இருமல் வரும்போதெல்லாம், கூடவே கொஞ்சம் ரத்தமும் வந்தது. அந்தக் கைக்குட்டையால் அதைத் துடைத்துக்கொண்டு மேலும் மேலும் பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசி முடித்தபோது, அந்தக் கைக்குட்டை சிவப்பாக மாறி இருந்தது. அந்தக் கைக்குட்டைக்குச் சொந்தக்காரர்தான் பட்டுக்கோட்டை அழகிரி.

தனக்கு வந்துள்ள காசநோய் குறித்துக் கவலை கொள்ளாமல் தொடர்ந்து மேடைகளில், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசிவந்த அவரை இறுதியில் அந்நோய் வென்றுவிட்டது. 1949 மார்ச் 28 அன்று அவர் காலமானார். 50 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அவர் இம்மண்ணில் வாழ்ந்தார்.

தொடக்கத்தில் அவர் ஒரு பக்திமானாகவே இருந்தார். ஆறு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்து திரும்பியவர் அவர். அந்த ஊரில் இருந்த மாரியம்மன் கோயில் பூசாரி பக்கிரி சட்டாம் பிள்ளைதான் அவரை நாத்திகராக மாற்றியவர்.

ஒரு முறை எஸ்.வி.லிங்கம் பட்டுக்கோட்டைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் அழகிரி தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தக் கேள்விகள் கூர்மையாய் இருந்தன. லிங்கத்தின் விடைகள் செம்மையாய் இருந்தன. இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டது. எஸ்.வி.லிங்கத்துடன் அழகிரியும் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்டார். அந்தப் பயணத்தின் போதுதான், நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அழகிரி பேசினார். அதுதான் அவரது முதல் பேச்சு. அதன்பின் பல ஆண்டுகள் அவர் பேசிக் கொண்டே இருந்தார். தமிழகம் முழுவதும் அவர் குரல் எதிரொலித்தது.

இறுதியாக 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். “அடுத்த மாநாட்டிற்கு நான் இருப்பேனா என்று தெரியவில்லை. என் தலைவனுக்கும் என் தோழர்களுக்கும் இறுதி வணக்கம் சொல்லிவிட்டுப் போகவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று அவர் பேசியபோது, அனைவரும் கண்கலங்கினர். அதுவே அவருடைய கடைசிப் பேச்சு. நாகையில் தொடங்கிய அவரது பேச்சுப் பயணம், ஈரோட்டில் நிறைவடைந்தது.

அதன்பின் சென்னை தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில் சேர்ந்தார். அழகிரியின் மருத்துவமனைச் செலவுகளுக்கு ரூ.100/- அனுப்பிவிட்டு, அந்தப் பற்றுச்சீட்டைத் தனக்கு அனுப்பிய பின்பே, கூட்டங்களுக்குத் தேதி தருவேன் என்று அண்ணா அறிவித்தார். அவர் இறந்தபின்னும் அந்தக் குடும்பத்திற்கு 6000 ரூபாய் கடன் இருந்தது. கலைவாணர் தஞ்சையில் ‘கிந்தனார்’ நாடகம் நடத்தியும், தன் சொந்தப் பணத்தைக் கொடுத்தும் அந்தக் கடனை அடைத்தார்.

‘தூக்குமேடை’ நாடகம் தஞ்சையில் அரங்கேறியபோது, தலைமை ஏற்று உரையாற்றிய அழகிரி, ‘கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதியை நான் பாராட்டுகிறேன். இனி அவரைக் கருணாநிதி என்றில்லாமல், கலைஞர் கருணாநிதி என்றே அழைப்போம்’ என்றார். அன்று அவர் கொடுத்த பட்டம்தான் இன்றுவரை நின்று நிலைத்துள்ளது.

மேலும் படிக்க..

தனி ஈழம் - சிங்களர்கள் கேட்க வைத்தார்கள்


-எழில்.இளங்கோவன்
அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் நிலை; ஆற்றொணாத் துயர்; அரச பயங்கரவாதச் சிங்கள இராணுவத்தினால் உயிர்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள்; உண்ண உணவில்லை; உடல்மறைக்கத் துணியில்லை; உற்றார் பெற்றோர் உறவினர்கள் அருகில் இல்லை; வீடில்லை, விளக்கில்லை, வெந்த புண்ணுக்குத் தடவ மருந்துகூட இல்லை - ஆம்! இதுதான் இன்று ஈழத்தின் நிலை, ஈழ மக்களின் நிலை!

ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளுமே ஈழ மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்திவிட்டன - தமிழ்நாட்டில்! காங்கிரஸ் கட்சியினரே, இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்று பேசிவிட்டு, திடீரென்று ஈழ மக்களுக்காக நிதி திரட்டத் தொடங்கிவிட்டார்கள். ‘போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், இலங்கை என்ற நாடுதான் உள்ளது; ஈழம் என்று சொல்லக்கூடாது’ என்று சொல்லி ஈழ மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வராமல் இருந்த செல்வி ஜெயலலிதா திடீரென்று அறிவித்துவிட்டார், இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட சுயநிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ அமைவதை ஆதரிப்பதாக. புரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏதோ சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் திடீர் நிதிதிரட்டலுக்கும், ஜெயலலிதாவின் திடீர் இ.அ.ச.உ.சு.அ.பெ. தமிழர் நாடு அறிவித்தலுக்கும் காரணமான நம் தேர்தல் ஆணையத்திற்கு முதலில் நம் நன்றியைச் சொல்லுவோம். அதுசரி, அதென்ன இலங்கை அரசமைப்புச் சட்டம், சுயநிர்ணய அதிகாரம்? ஜெயலலிதா பக்கத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒருவேளை புரிந்திருக்குமோ என்னவோ!

‘தேசியச் சிறுபான்மை இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்’ என்று கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். அதாவது ஒரு நாட்டில் இருக்கும் தேசியச் சிறுபான்மை இன மக்கள், அவர்களின் உரிமையை அவர்களே முடிவு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, இலங்கைத் தீவில் தமிழர்கள் இன்று தேசியச் சிறுபான்மை இன மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் சிங்களத் தேசிய இன மக்களின் அரசாகிய இலங்கை அரசுடன் இணைந்து இருப்பதா அல்லது தனியாகப் பிரிந்து போய்விடுவதா என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களின் முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும். இதுதான் தேசியச் சிறுபான்மை இனத்தின் சுயநிர்ணய அங்கீகாரம்.

ஈழ மக்களின் முடிவு? எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனிஈழம் - தமிழ்ஈழம். இங்கே சில செய்திகளைப் பார்ப்போம்.

1919 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் இலங்கையில், இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பபைத் தொடங்குகிறார் சர். பொன். அருணாசலம். இந்தக் காங்கிரஸ் பின்னாளில் ஐக்கிய தேசியக் கட்சியாக மாறியது. சர். பொன். அருணாசலம் 1875 இல் இலங்கையின் முதல் பதிவாளர் நாயகமாகப் பதவி வகித்தவர். 1907 ஆம் ஆண்டும், 1912 ஆம் ஆண்டும் இலங்கைவாழ்த் தமிழர்கள் சார்பாக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றவர். இவரைப் பற்றி இலங்கையின் வரலாற்றிசிரியர் கே. எம்.டி. சில்வா, ‘மிக உயர்ந்த அரச அதிகாரியான அருணாசலம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அற்புதமாகத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார். சிங்கள மக்களுக்கும் அவர் சேவை செய்திருக்கிறார். அவரைப் போல வேறு யாரும் சிங்களர்களுக்கு இப்படிச் சேவை செய்ததில்லை’ என்று எழுதி இருக்கிறார்.

இப்படிப்பட்ட தமிழர் தலைவர், 1919 இல் இலங்கை தேசியக் காங்கிரசை, தமிழர் - சிங்களவர்களை இணைத்துத் தொடங்கினார். இதைப் பொறுக்கமாட்டாத சிங்கள இனவாதத்தலைவர்கள் சிலரால் தூண்டப்பட்ட கண்டியைச் சேர்ந்த டி.பி. எல். மூனமலே, ஜெ. ஏ. ஹலல்கொட, ஜி. மடவெல ஆகியோர் அடங்கிய மூவர் குழு லண்டன் சென்று காலனி நாடுகளின் செயலாளர் மில்லரைச் சந்தித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ், நாட்டில் உள்ள அனைவருக்காகவும் ஏன் தேவைப்படுகிறது என்பதை அறியாமல் காங்கிரசுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ (சர். அருணாசலம்) அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்று சிங்களர்களுக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இச்செய்தி இலங்கை ஆளுநர் மானிங்ஸ் மூலமாக சர். அருணாசலத்திற்கு வரவே, உடனே அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சிங்களத் தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி, தமிழர்களுக்கு எதிரான அவர்களின் செயல்களைக் கண்ட சர். அருணாசலம், அவரின் தமையன் பொன். இராமநாதனுடன் இணைந்து 1923 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் மகாசபை என்ற அமைப்பைத் தொடங்கினார். மகா சபையின் தொடக்கவிழாவிலேயே சர். அருணாசலம் இப்படிப் பேசினார், ‘சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப்போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர் தன்மானத்துடன் வாழத் தனி ஈழம் தான் வழி. அதுதான் இனி நமது இலக்கு. அதனை அடையத் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை, தோழமை அவசியம். நமது இலக்கை விளக்கி நாடெங்கினும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.’

இலங்கையில், தமிழர்களுக்குத் தனி ஈழம் தான் வேண்டும், அதைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று 86 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்பதற்கு சர். அருணாசலம் சான்று! இது அவர்களின் உரிமை, சுயநிர்ணய உரிமை.

அடுத்து, தந்தை செல்வா. இவர் 1949 டிசம்பர் 18 ஆம் நாள் தமிழ் மக்களுக்குச் சம உரிமை; இன்றேல் தமிழ்ப்பகுதிகளைத் தனிமாநிலமாக்கி இலங்கையை இணைப்பாட்சி நாடாக்குவோம் என்ற முழக்கத்துடன் முருதானை அரசாங்க லிகிதர் சேவைச் சங்க மண்டபத்தில் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். அவரே அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1951 ஆம் ஆண்டு முதல் முறையாக, தமிழ் மக்கள் தனித்தேசிய இனம், சுயநிர்ணய உரிமையுள்ள தன்னாட்சி அமைப்பின் கீழ்தான் அவர்கள் தன்மானத்துடன் வாழமுடியும் என்று பிரகடனப்படுத்தினார்.

1969 ஏப்ரல் 15 ஆம் நாள் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ‘இலங்கை இப்போதிருக்கும் கோலத்தில் சிங்கள மக்கள் யாரும் எமக்குச் சுயாதீனம் கொடுக்க ஆயத்தமாக இல்லை. அதுபோலத் தமிழ்மக்கள் விடாப்பிடியாகச் சுயாதீனம் கோரி நிற்க வேண்டும். உலகில் என்னென்ன மாற்றங்கள் வரக்கூடும் என்று கூறமுடியாது. இறுதியில் இலங்கை அரசாங்கமே தமிழ்ப் பிரதேசத்திற்குச் சுயாதீனம் அளிப்பதே அப்பிரதேச மக்களுக்கும், ஏனையோருக்கும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரே வழி என்பதை உணரக்கூடும். அந்த நாள் வரும் வரைக்கும் நாம் பொறுமை இழக்காமலும் இலக்கைக் கைவிடாமலும் இருக்க வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார் தந்தை செல்வா அவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, ஏன் இவர்கள் இப்படித் தனிஈழம் என்ற இலக்கை நோக்கித் தள்ளப்பட்டார்கள்?

இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. அதனால் 26.05.1943 இல் இலங்கைத் தலைவர்களிடம், அரசு, அரசியலில் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதற்கான பரிந்துரைகளை அறிக்ககையாகத் தரும்படியும், அதையும் இலங்கைச் சட்டமன்றச் சபாநாயகர் மற்றும் 3 வெள்ளையர் பிரதிநிதிகள் நீங்கலாக 75 விழுக்காடு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அவ்வறிக்கை இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. அதன்படி அறிக்கையும் தந்தார்கள் இலங்கைத் தலைவர்கள். அதில் திருப்தி அடையாத பிரிட்டிஷ் அரசு, சோல்பரி என்பவரின் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அதை சோல்பரி ஆணையம் என்பார்கள். இவ்வாணையத்தைச் சிங்களவர்கள் எதிர்த்தார்கள்.

ஏனென்றால் பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதிக்கம், சிறுபான்மை மக்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது, அதைச் சிங்களத் தலைவர்கள் திணித்துவிட வழிவிடக்கூடாது என்று சோல்பரி நினைத்தார். ஆகவே சட்டசபையின் 75 சதவீத உறுப்பினர்கள் என்பதில் சிறுபான்மைத் தமிழர்கள், இஸ்லாமியர் பலரும் சமமாக இடம்பெறச் சட்டவடிவு பெறவேண்டும் என்பது சோல்பரியின் திட்டம். இதனை அறிந்த சிங்களத் தலைவர்கள் சோல்பரியிடம் நாடகமாடியும், சர். பொன். அருணாசலம், சர். பொன். இராமநாதன் ஆகிய தமிழர் தலைவர்களிடம் நயவஞ்சகப் பொய்வாக்குமூலம் அளித்தும், மேற்சொன்ன 75 சதவித பெரும்பான்மை என்பது சட்டவடிவம் பெறாமல் சோல்பரி அறிக்கையின் 29 ஆம் சரத்தோடு அது நின்றுவிட்டது.

அதன் விளைவு என்ன தெரியுமா? சுதந்திர இலங்கையின் முதல் சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டங்களால் தமிழர்கள் நடுத் தெருவுக்குத் தள்ளப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதார முதுபெலும்பாகத் திகழ்ந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள். நிலச்சீர்திருத்தம் என்ற பெயரால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுச் சிங்களவர்களுக்கு இலவச நிலங்கள் கொடுக்கப்பட்டன. மீன்பிடிப் படகுகள் சட்டம், ஆம்னி பஸ் உரிமைச்சட்டங்களின் மூலம் தமிழர்கள் (குறிப்பாக இந்தியத் தமிழர்கள்) படகு உரிமை பெறவும், ஆம்னி பஸ் உரிமை பெறவும் தடுக்கப்பட்டார்கள். சிங்களவர்களே இதில் பொரும் பயன் அடைந்தார்கள்.

சோல்பரி அறிக்கையின் 29 ஆம் விதியை மீறிய சிங்கள இனவெறி ஆதிக்கத்தைக் கண்ட சோல்பரி பிரபுவே இதனைப் பார்த்து மனம் நொந்து போனார் என்று காலம் சென்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம் கூறுகிறார். அதைத் தொடர்ந்து தமிழரை ஒழிக்கத் தமிழைப் புறக்கணித்துச் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற நிலைப்பாட்டிற்குச் சிங்களத் தலைவர்கள் வந்தார்கள்.

1955இல் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்பிய அன்றைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தமிழுக்குச் சம வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள், களனியில், அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமாகச் சிங்களமே ஆட்சிமொழி என்ற தீர்மானத்தைப் பிரகடனமாக்கினார்.

1956 தேர்தலைச் சந்தித்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழி ஆக்குவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்தார். அவருக்கு ஆதரவாக பிலிப்குணவர்தன, ஈறிய கொலை, ஆர்.ஜி. சேனநாயகா போன்ற பொது உடைமை பேசும் இடதுசாரிகளும், சிங்கள பாஷா (மொழி) பெரமுனத் தலைவர் டபிள்யூ. தகநாயகாவும், தலைமை பவுத்த பிக்கு குருபுத்ரசித்த தேரோ போன்ற சிங்கள இனவாதிகளும், தமிழுக்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினர். சொன்னபடி செய்தார் பணடாரநாயக்கா. 1956 ஜீலை 7 ஆம்நாள் கவர்னர் ஜெனரலின் ஒப்புதல் பெற்று தனிச்சிங்களம் ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றினார்.

இதுகுறித்துச் சிங்கள இடதுசாரி முக்கியத் தலைவரான கொல்வின் ஆர்.டி. சில்வா கருத்துக் கூறும்போது ‘ஒரு மொழி என்றால் இரண்டு நாடுகள். இரண்டுமொழி என்றால் ஒரு நாடு. தனிச்சிங்களச் சட்டத்தின் மூலம் தனித்துவமும், சிறந்த பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க முற்படுவீர்களானால் அவர்கள் புதிய தேசம் அமைத்துக் கொள்ள நீங்களே காரணமாகி விடுவீர்கள். இப்போது அவர்கள் கேட்பதை விட, பிறகுக் கூடுதலாகக் கேட்பார்கள். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்தார்.

கவனத்தீர்களா! தனிச் சிங்களச் சட்டத்தினால் தமிழர்கள் இரண்டாந்தர மக்களாக்கப்பட்டதை உணர்ந்த சில்வா, தமிழர்கள் புதிய தேசத்தைக் (தனிஈழம்) கேட்பார்கள் என்று 1956 ஆம் ஆண்டே கூறிவிட்டார்.

இவைமட்டுமா!

- பண்டா - செல்வா ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது சிங்களர்களால்
- மோட்டார் வாகன இலக்கத் தகடுகளில் சிங்களத்தில் ஸ்ரீ போடவேண்டும் என்ற சட்டம்
- சிங்களர்களுக்குச் சலுகையும், தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் கல்வியைத் தரப்படுத்தல் என்னும் சட்டம்.
- சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத் தமிழர்கள் 10 லட்சம் பேரை நாடற்றவராக ஆக்குதல்.

இன்னும், தமிழர்க்கு எதிராக 1958 முதல் நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள்; அதனால் உயிரை, உடைமைகளை இழந்த ஆண்கள், பெண்கள், முதியோர், சிறியோர், குழந்தைகள் நோயாளி என்று பாதிப்புக்கு ஆளானார்கள் தமிழர்கள். பெண்கள் பாலியல் படுகொலைகளையும், தேடிப்பிடித்து, ஓடஓட விரட்டித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை அனுபவித்தவர்கள் நாம் அல்ல - ஈழத் தமிழர்கள்.

1983 இல் வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, ஜெகன் போன்றோர் விழிகள் பிடுங்கப்பட்டு, காலில் போட்டு மிதிக்கப்பட்டக் கொடுமையை நாடு அறியும், உலகு அறியும். வாழ்வா சாவா என்ற நிலை. ஆயுதபாணியான சிங்கள இராணுவம் வரும் போது, சிங்களர்கள் ஆயுதம் ஏந்தும் போது, வேறு வழியின்றித் தமிழ் இளைஞர் களும் ஆயுதம் ஏந்தினார்கள். போராளிகளானார்கள் - இன்று, களத்தில் நிற்கிறார்கள்.

இப்பொழுது ஈழத்தில் கொத்துக் கொத்தாய் அழிந்து கொண்டு இருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டியதுதான் முதல் தேவை. அதாவது போர் நிறுத்தம்.

மேலும் படிக்க..

கூட்டணிகள் - தேர்தலுக்கு முன்னும் பின்னும்

- சுப.வீரபாண்டியன்

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக அரசியல் கூட்டணிகள் எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாகி விட்டது. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இரண்டு கட்சிகள் இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. எதிர்பார்த்தபடியே, பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போய்விட்டது. தே.மு.தி.க. ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிக்குப் போவதற்கு முன், பா.ம.க. நடத்திய வாக்கெடுப்பு நாடகம் சுவையானது. வாக்கெடுப்பு முடிந்த அடுத்த நிமிடமே, அணிமாற்றம் குறித்த நீண்ட அறிக்கை அரங்கில் படிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முடிவு செய்யப்ட்ட ஒன்றை, வாக்கெடுப்பு நடத்தி அறிவித்தவர் மருத்துவராகத்தான இருக்க முடியும்.

சநதர்ப்பவாதமும், அணிமாற்றமும் அரசியலுக்குப் புதிதில்லை. ஆனாலும், அது குறித்த சிறு தயக்கமோ, கூச்சமோ இல்லாமல், இரணடு பக்கமும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்தி, எந்த நிமிடத்திலும் நான் எங்கே வேண்டுமானாலும் போவேன் என்பதைப் பலமுறை மெய்ப்பித்தவர் ராமதாஸ்தான். தி.மு.க அரசின் மீது ஏராளமான குறறச்சாட்டுகளைக் கூறியுள்ள அவர், தான் இருபது நாட்கள் சென்னையில் இருந்தும், தி.மு.க.வில் இருந்து தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர்கள் யாராவது வந்து பார்த்து, கூடுதல் இடமும் தருவதாகச் சொல்லியிருநதால், அந்தக் குறைகளெல்லாம் இல்லாமல் நீங்கியிருக்குமோ என்னவோ!

இத்தனைக்குப் பிறகும், இப்போது உருவாகியுள்ள கூட்டணிகள் உண்மையானவை என்று தோன்றவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணிகளில் ஏராளமான மாற்றங்கள் வரும் என்பது இப்போதே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த முறை தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களைப் பெறுவதுகூடக் கடினம் என்றே தெரிகிறது. பத்து இருபது கட்சிகள் சேர்ந்துதான், ஒரு புதிய கூட்டணியாகி, புது அரசை உருவாக்கும் போலத் தோன்றுகிறது. எனவே, நாம் ஒரு கட்சிக்கு அளிக்கும் வாக்கு, அதன் மூலமாக நாம் விரும்பாத இன்னொரு கட்சிக்குப் போவதற்குப் பெரும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் முடிந்தபிறகு, பா.ம.க. எங்களைத் தான் ஆதரிக்கும் என்று கபில்சிபல் இப்போதே பேட்டியளிக்கிறார். சற்றும் நாணமற்ற அரசியலுக்கு நாம் வந்துவிட்டோம் என்பதைத்தான் இவை உணர்த்துகின்றன. மருத்துவர் ராமதாசும், தி.மு.க.வைத்தான் தாக்கி அறிக்கை விட்டுள்ளாரே தவிர, மறந்தும் காங்கிரசைக் குறைகூறவில்லை. மாறாக, அதனைப் பாராட்டியும் பேசியுள்ளார்.

ஈழச்சிக்கலில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்ட விதத்தைக் கணக்கில் வைத்து இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் பலர் உறுதிபூண்டுள்ளனர். அதற்காக சிறு சிறு இயக்கங்கள் கூடத் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க போன்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளும் நாளை காங்கிரசுக்குப் போய்ச்சேர பெரும் வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க கூட்டணியே கூட ஒட்டுமொத்தமாக நாளை காங்கிரசை ஆதரிக்கக் கூடும். எனவே, மக்கள் இப்போது அளிக்கவிருக்கும் வாக்குகளை நம்பியல்ல, தேர்தலுக்குப் பிறகு மாறப்போகும் கூட்டணிகளை நம்பித்தான் காங்கிரசும், பா.ஜ.க.வும் காத்திருக்கின்றன. பாவம் மக்கள்!

மேலும் படிக்க..

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP